tet books

time


follow me on fb

Monday, September 23, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணி அல்ல. கல்வியின் தரமும் குழந்தைகளின் நலனும் முக்கியமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு 15.11.2011-ஆம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டது.
இதை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்பட 94 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஏற்கெனவே தங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப்பணியிடத்தில் இவர்களை நியமிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 2010-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. எனவே எங்களையும் தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜி, சான்றிதழ் சரி பார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதித் தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை என்று வாதாடினார்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் காசிநாத பாரதி உட்பட பலர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கை விசாரித்த பிறகு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் அளித்த உத்தரவு:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூட இந்த தகுதித் தேர்வை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை; பணியில் சேரவும் இல்லை.
மனுதாரர்களைப் பொருத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையின் பிரிவு 5-இல் கூறப்பட்டுள்ளபடி விதிவிலக்கு கோர முடியும்.
அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதித் தேர்வு எழுதாமல், ஏற்கெனவே சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.
ஆசிரியர் பணிக்கு 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி தகுதித் தேர்வு நடந்தது. அதில், 6.56 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சிப் பெறவில்லை. 0.5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. துணைத் தேர்விலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு எழுதியதில், வெறும் 2.99 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வியின் தரம் குறைந்து விடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links