tet books

time


follow me on fb

Thursday, December 13, 2012

YMCA இல் ஒரு நாள் ... அனுபவமும் ஓர் அலசலும்.

அதிரடியாய் யாரும் நினைக்காத நேரத்தில் வந்தது Selection List  இடைநிலை ஆசிரியர் - பட்டதாரி ஆசிரியர் - முது கலை பட்டதாரி ஆசிரியர் என அனைவருக்கும்.

இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அழைக்கப்பட்டனர் 13 ஆம் தேதி பணிநியமன ஆணை பெற சென்னை YMCA க்கு.

20 ஆயிரம் என்பது எண்ணால் பார்க்கும் போது அது சிறிதாகதான் படுகிறது. ஆனால் நேரில் பார்த்ததுமே வியந்துவிட்டேன்! திருவிழா கூட்டத்தினை விட 10 மடங்கு கூட்டம்.

அதிகாலை 4 மணிக்கு YMCA மட்டைபந்து திடலில் சென்று அமர்ந்தோம். மாவட்ட வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தென் மாவட்டங்கள் அனைத்தும் மேடையிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் வட மாவட்டங்கள் அனைத்தும் மேடைக்கு மிக அருகிலும் அமைவிடம் தரப்பட்டிருந்தது.

காலை கடன்களை செய்ய mobile toilet எனப்படும் தற்காலிக கழிப்பறைகளையே அமைத்திருந்தனர். ஆண்களுக்கு பரவாயில்லை ஆனால் பெண்கள்தான் 2 மணி நேரம் காத்துக்கிடந்து தங்கள் இயற்கை உபாதைகளை தீர்க்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. எனது அருகில் அமர்ந்திருந்த ஆசிரியர் ஒருவர் ‘இதற்குதான் ஆணாய் பிறந்திருக்க வேண்டும் என்று கூறினார்‘ அவரின் 2 மணிநேர காத்திருப்பு அவரை அப்படி சொல்ல செய்திருந்தது.  இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு சரியான கழிப்பிட வசதியை தண்ணீர் வசதியுடன் செய்து கொடுத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

பிறகு 8 மணி அளவில் அனைவருக்கும் பொங்கல் காலை உணவாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இரவு முழுக்க அலைச்சலில் பயணமாக வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் அந்த பொங்கலை உண்டவுடன் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

அனைவரின் தலையும் கீழே விழுந்து சொக்கிவிட்டனர். காலை 11 மணி வரை ஒரே தூக்க மயக்கத்தில் இருந்த அவர்களை தட்டி எழுப்பியது முதல்வர் அவர்களின் வருகை.

சரியாக 12 மணிக்கு விழா மேடைக்கு வருகை தந்திருந்தார் தமிழக முதல்வர் அவர்கள். விழா மேடையில் கல்வி அமைச்சர் - முதல்வர் - தமிழக செயலாளர் திரு.சாரங்கி அவர்கள் - கல்வித்துறை இயக்குநர் திருமதி. சரிதா அவர்கள் என நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

வழக்கமாக தி.மு.க அமைச்சரவையாக இருக்கும்போது அனைத்து அமைச்சர்களும் முன்னிலை படுத்தி பேசப்படுவது வழக்கம் ஆனால் ஆ.தி.மு.க விழாவினில் அமைச்சர்களின் பெயர் கூட வெளியில் வராது போல... விழாவிற்கு அனைத்து அமைச்சர்களும் வந்திருந்த வேலையில் மேடையில் கல்வித்துறை சார் அமைச்சர் மட்டுமே முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். எனினும் அவரின் பதவி மட்டுமே அறிவிக்கப்பட்டது மேடையில் பெயர் விடுபட்டுவிட்டது. அந்த அளவு விழாவில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தவர் முதல்வர் ஒருவரே.

36 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் 18 மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகளையும் கொடுத்து இந்த விழாவின் முக்கிய நிகழ்வு நடந்தது.  இவை இரண்டினையும் கூட்டிபாருங்கள் 9 வரும். இதுதான் அம்மாவின் lucky எண்ணாம்.

பச்சை நிறத்திற்கும் - மெருன் நிறத்திற்கும் சரி சமமான முக்கியத்துவம் மேடைகளிலும் விழா பந்தலிலும் காண முடிந்தது.

பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி 30 நிமிடங்கள் வரை இருந்தது. அந்த இடைவெளியில்தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் என்ற விதத்தினில் அமைச்சர்கள் ஆசிரியர்களை நோக்கி வந்து ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவருக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவது போல் வழங்கி புகைபடம் எடுத்துக்கொண்டனர்.

அதனுடன் விழா முடிவடைந்தது இறுதியாக திருமதி. சபிதா அவர்கள் நன்றி உரை வழங்கி 2 மணி அளவில் விழாவினை முடித்து வைத்தனர்.

மதிய உணவு 3 மணியை கடந்து அலைச்சலுக்கு பிறகே அனைவரின் கைக்கு கிடைத்து வயிற்றை பாதியாக நிரப்பியது.

அதன் பின்னர் 1 மணி நேரத்திற்குள் அனைவரும் தங்கள் ஊர் பேருந்தில் ஏறி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இரவு 10 மணி வரை இந்த பணி நடைபெற்றது.

மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த பணி இரவு 10 மணிக்கு முடிந்து என்றால் இவ்வளவு நேரமும் விழாவில் கலந்து கொண்டவர்கள் காவல்துறையால் ஏமாற்றப்பட்டனர் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் 1 மணிநேரத்தில் அனைவரையும் பேருந்தில் அமர்த்தி விடுவோம் என்ற அவர்களின் பொய்யான வாக்குறுதியை நம்பி மணிக்கணக்காக காத்திருந்தோர் ஏராளம்.

பிறகு ஒருசிலருக்கு இரவு உணவு பார்சல் கிடைத்தது பலருக்கு கிடைக்கவில்லை தென் மாவட்டம் தொடங்கி ஒவ்வொரு மாவட்ட பேருந்துகளாக வரவழைக்கப்பட்டு ஆசிரியர்கள் ஏற்றி தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திங்கட்கிழமை ஒவ்வொரு மாவட்ட DEO அலுவலகங்களை தொடர்புகொண்டு பணியில் அமர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே SR பதிவு தொடங்கப்படும்.

இதற்காக ஆசிரியர்கள் பெற வேண்டியது ஒரு Medical fitness சான்றிதழ்.


இதனுடன் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கூட இரண்டு செட் சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் சென்று SR தொடங்கி பணியில் சேர்ந்து கொள்ளலாம்.


புகைப்பட தொகுப்பினை காண இங்கே கிளிக் செய்யவும் 

1 comment:

 1. TET நியமன உத்தரவுகளை வழங்க தடை விதிக்க மனு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
  பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
  சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர்,தேர்ச்சி பெற்றனர்.
  தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.
  கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதிமதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது.
  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது.
  எனவே, நியமன உத்தரவுகளை வழங்க, தடை விதிக்க வேண்டும். தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது.
  இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்"தள்ளிவைத்தது.
  "நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதானஇறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links