26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்: ஜெயலலிதா உத்தரவு
தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை தோற்றுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிப்போருக்கு இணையான சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின்தங்கியஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இப்போது அரியலூர், மங்களூர் (கடலூர் மாவட்டம்), காரிமங்கலம், பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் (ஈரோடு மாவட்டம்), குண்டடம் (திருப்பூர் மாவட்டம்), தளி, வேப்பனஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), வேப்பூர் (பெரம்பலூர் மாவட்டம்), நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு (சேலம் மாவட்டம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை மாவட்டம்), திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), மல்லசமுத்திரம் (நாமக்கல் மாவட்டம்) ஆகிய 26 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 26 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக வரும் கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இந்தப் பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கும்.
பணியிடங்கள் தோற்றுவிப்பு: 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொருபள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம்,ஏழு முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,கம்ப்யூட்டர், உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகிய ஆசிரியர் பணியிடங்கள் தலா ஒன்று என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலைஉதவியாளர், நூலகர் பணியிடம், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரர் என ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 1000 தொடக்கபள்ளியில் ஆங்கில வழிக்கல்வி வேலூர்: தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அனை வருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000 ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 10 அரசுப் பள்ளிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து உயர் மட்டக்குழு தேர்வு செய்த பள்ளிகளில், முதற்கட்டமாக ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்க அரசு உத்தரவிட்டது.
பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு:
பள்ளி கல்வி துறை திட்டம் ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிடமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில்,ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால், கலந்தாய்வு முடியும் வரை, ஆசிரியர்கள், கற்பித்தல் பணியில், ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக, தாங்கள் விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் உத்தரவு வாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, பள்ளிகளுக்கும் செல்லாமல், மாறுதல் உத்தரவு வாங்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். படிப்பு பாதிப்பு : குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர்களை சந்திப்பதற்காகவும், தங்கள் மாவட்ட அமைச்சரை சந்தித்து, பரிந்துரை கடிதங்களை பெறவும், சென்னைக்கு பறந்து வந்து விடுகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை அறிந்த பள்ளிக் கல்வி இயக்குனரகம், கலந்தாய்வை, கோடை விடுமுறை காலமான மேமாதத்திலேயே, நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் வகை வாரியாக, தனித்தனியாக, கலந்தாய்வு தேதி பட்டியலை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வை, காலம் தாழ்த்தி நடத்துவதில் ஏற்படும் பிரச்னைகளை, கல்வித் துறை உயர் அதிகாரிகளும், நன்கு உணர்ந்துள்ளதால், இயக்குனரகத்தின் திட்டத்திற்கு, ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்-லைன் முறை : மேலும், "ஆன்-லைன்' முறையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அரசு அனுமதி அளித்ததும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியாகும். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி துவங்கிய பின், கலந்தாய்வை நடத்துவதால், மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்களுக்கும், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. தங்கள் பிள்ளைகளை, மாறுதலாகிச் செல்லும் இடங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதில், கடுமையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது, முன்கூட்டியே, கலந்தாய்வை நடத்துவதுஎன்பது வரவேற்கத்தக்கது. இதனால், மாறுதலாகிச் செல்லும் இடங்களில், தங்கள் பிள்ளைகளையும், முன்கூட்டியேபள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளில்,ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியும். காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணையை, ஏப்ரல் இறுதியிலேயே வெளியிட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள், கோடை விடுமுறைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வர். கலந்தாய்வு அட்டவணையை, முன்கூட்டியேவெளியிட்டால், அதற்கேற்ப, அவர்கள், தங்கள் பயணத்தை, திட்டமிட முடியும். முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை, இந்த ஆண்டுடன் நிறுத்தி விடாமல், ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இ. சுடலைமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 6-ஆவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும்; தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு முந்தைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும்; வேலைவாய்ப்பக பதிவுமூப்பின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாதச் சந்தாத் தொகையை ரூ.50ஆக குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன