2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும்என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு.
2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–நான் பி.எஸ்சி, பி.எட் முடித்துள்ளேன். கடந்த 2010–ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படிஎனது பெயரும் ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. 13.5.2010 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.அதன்பின்பு, எனக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை. காரணம் கேட்ட போது, 23.8.2010–க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள்கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எனக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு
இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, எனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே, என்னை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதே போன்று உத்தமபாளையத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம், மதுரையை சேர்ந்த நிர்மலா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் செய்யது இப்ராகிம் சார்பில் வக்கீல் சண்முகராஜாசேதுபதி, நிர்மலா சார்பில் வக்கீல்முத்தால்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
நிர்ப்பந்திக்கக்கூடாது
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘‘ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்பே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. எனவே, மனுதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் மனுதாரர்களை நியமிக்க வேண்டும்.’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன