tet books

time


follow me on fb

Sunday, January 13, 2013

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு

குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது, தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியில் இருப்பார்.ஆசிரியர்களின் ஊதியம், விடுமுறை, இடமாற்றம், வருங்கால வைப்புநிதி தொடர்பான பணிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் டி.இ.ஓ. பதவி, முக்கிய பதவியாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 69 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு டி.இ.ஓ. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

டி.இ.ஓ. பதவியை பொறுத்தமட்டில், 25 சதவீத காலி இடங்கள் நேரடி போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.நேரடி டி.இ.ஓ. காலி பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

டி.இ.ஓ. பதவி என்பது அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு) நிர்வாக பதவி ஆகும். டி.இ.ஓ.வாக பணியில் சேருவோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.) பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர், இயக்குனர் என்று படிப்படியாக பதவி உயர்வு பெறுகிறார்கள். மேலும், சிறப்பு பதவி உயர்வு மூலமாக வருவாய்த்துறை சாராத பணிப்பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம்.எழுத்துத்தேர்வில் குறிப்பிட்ட பாடத்தில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 40 மார்க் என்று இருந்தது. இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்திருப்பதை போன்று நேரடி டி.இ.ஓ. தேர்விலும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, டி.இ.ஓ. தேர்வில் வெறுமனே விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.


நன்றி... கல்விச்சோலை 

2 comments:

  1. பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் விநியோகம்
    ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில்இடம்பெற்றுள்ளன.
    ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம்தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
    2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
    தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
    அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
    தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
    அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
    ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
    ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
    இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
    பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    உதவிப் பேராசிரியர்கள் - 1,063
    சிறப்பாசிரியர்கள் - 841

    ReplyDelete
  2. தேர்வுவாரியம் மூலம் தேர்வான 20ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்நீக்கம்
    அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.
    இதற்கான பட்டியலை வேலைவாய்ப்புமற்றும் பயிற்சி துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அனுப்ப உள்ளது. அரசு பணிகளுக்கு அல்லது ஆசிரியர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் பட்டியல்மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறைக்கு அனுப்பப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பதவிக்கு தேர்வாவோரின் பட்டியல் மாநில, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.
    அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேரவு மூலமாக ஏறத்தாழ 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையினை வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து விட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட 20 ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்களை பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்குவதற்காக அதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    பெயர் நீக்க பட்டியல் கிடைக்கப் பெற்றதும் சம்பந்தப்பட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லதுமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும். முதுநிலை பட்டாதாரியாக இருந்து பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவராக இருந்தால் அவர்களின் துறை தலைவரிடம்இருந்து தடையின்மை சான்று பெற்று முதுநிலை கல்வி தகுதிக்கான பதிவு மூப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். இதற்கிடையே புதிதாக பணியில் சேர்ந்தஆசிரியர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வாங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links