‘நம் எண்ணங்களே செயல்களை தீர்மானிப்பவை‘
- முதலில் நம் எண்ணங்களை ஏதாவது ஒன்றின் மீது செலுத்துவது முக்கியமான ஒன்று
- தேர்ந்தெடுத்த பாதையின் கடினத்தன்மையை உணர்வது இரண்டாவது விடயம்
- கடினத்தன்மைக்கு ஏற்ப உழைப்பது மூன்றாவது விடயம்.
இந்த மூன்று விடயங்களையும் நாம் செய்யும் போது கூட நமக்கு எழும் குழப்பங்களும் பிரட்சனைகளும் ஏராளம்.
அவற்றில் ஒன்றுதான் எதை படிப்பது என்பதும் எப்படி படிப்பது என்பதும்.
எதை படிக்க வேண்டும் என்பதற்கு பதில் சொல்வது போட்டித் தேர்வுகளின் முந்தைய வினாத்தாள்களாகதான் அமையும்.
பொதுவாக TNPSC போன்ற மாநில அளவிலான தேர்வுகளுக்கு தயாராவதற்கு பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த துணையும் தேவை கிடையாது. அதுவும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாட புத்தகங்களையும் புரிந்து படித்தாலே போதும் 75 சதவிகித மதிப்பெண்களை அழகாக பெற்று விடலாம்.
TET போன்ற தேர்வுகளும் TNPSC தேர்வுகளை ஒத்தவையே அவற்றிற்கும் பாட நூல்களை தவிர மற்ற சந்தையில் கிடைக்கும் குப்பைகளை தேடி கண்டுபிடித்து வாங்கி பயன்படுத்துவது நாமாகவே நம் திறமையை குறைவாக எடைபோட்டுக் கொள்வதற்கு சமம்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒழுங்காக படித்த ஒருவனால் ஒரே பாய்ச்சலில் TET அல்லது TNPSC ஐ சமாளித்து வெற்றி பெற்று விட முடியும் என்பதுதான் என் கருத்து.
அறிதல் - புரிதல் எனும் இரண்டு திறன்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளில் கையாளப்படும் விடயங்கள். எனவே ஒவ்வொரு பக்கத்தினையும் பாட புத்தகத்தினில் படிக்கும் பொழுது நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் அதனை எந்தெந்த வகைகளில் வினாக்களாக வினவுவார்கள் என்பதை நம் மனதினால் ஒரு நோட்டம் இட்டுக்கொண்டே படிக்க வேண்டும்.
மத்திய அரசு பணிகளுக்கு
மத்திய அரசு பணிகளில் பலர் ஆர்வம் காட்டுவதே கிடையாது காரணம் ஆங்கிலத்தில் வினாக்கள் இருக்குமே என்ற அச்சம்தான்.
அப்படி அல்ல இங்கு நாம் தமிழில் படித்தவைகளைதான் அவர்கள் ஆங்கிலத்தில் வினவுகின்றனர்.
நான் இந்த 4 மாத காலங்களில் 8 மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி இருக்கிறேன். அனைத்திலும் நான் கற்றுக்கொண்ட ஒரே விடயம் புதிதாக ஒன்றும் படிக்க தேவை இல்லை நம் முந்தைய அறிவை சோதிக்கும் விதமாக மட்டுமே வினாக்கள் வினவப்படுகின்றன என்பதுதான்.
பொது அறிவுகள் ஒவ்வொரு வேளைகளுக்கும் ஏற்ப வினவப்படும் அதாவது வங்கி தேர்வு என்றால் அதற்கேற்ப வங்கி சம்மந்தமான பொது அறிவு வினாக்கள் வினவப்படும்
அது போல குற்ற புலனாய்வு துறை என்றால் நம் நாடு மட்டும் அல்லாமல் உலக அளவிளான வெளியுறவு போர் பற்றிய பொது அறிவு தகவல்கள் வினவப்படும்.
ரயில்வே துறை என்றால் அது தொடர்பான தகவல்கள் வினவப்படும்.
ஆனால் 60 சதவிகித கேள்விகள் நாம் பள்ளியில் படித்த விடங்களில் இருந்தே கேள்விகளாக அமையும் என்பதுதான் இதில் நாம் மகிழ வேண்டிய ஒன்று.
அது மட்டும் அல்லாமல் Mathematical Aptitude மற்றும் English knowledge ஆகியவற்றினை சோதிக்க அதிகமான வினாக்கள் வினவப்படுவது வாடிக்கை.
இதற்காக தனியாக நாம் Attitude மற்றும் Apptitude புத்தகங்களை சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்துவது நன்மையாக அமையும்.
ஏனென்றால் கொடுக்கப்படும் குறைந்த நேரத்தில் அனைத்து கடினத்தன்மை கொண்ட வினாக்களையும் தீர்த்துவிட நமக்கு தேவை பயிற்சி மட்டுமே.
கணிதத்தில் கூட வினவப்படும் வினாக்கள் 3 படிகளில் விடை காணும் படியாகதான் இருக்கும் ஆனால் அதற்காக நாம் குறைந்தது 5 மாதங்களாவது பயிற்சி எடுத்துகொண்டோமானால் எந்த தேர்வினையும் அழகாக சமாளித்து விடலாம்.
கடைசியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான்... நாம் நினைத்தால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும்.. நம் நிறை குறைகளை முதலில் உணர்ந்து கொண்டு ... நிறைகளை மெருகூட்டியும் குறைகளை களைந்தும் செயல்பட்டாலே போதும் எவ்விதமான போட்டித் தேர்வுகளையும் சமாளித்து வெற்றி பெற்றுவிட முடியும்..