ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர்
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக,15 ஆயிரம் ஆசிரியர்களை,
புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.
கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை,12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்குமீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில்,இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன்மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி
சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்.